மும்பை: அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி சந்தித்தது. 2011ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தொடர்ச்சியாக மூன்றாவது முறை இந்திய அணி வெல்லாததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் பொறுப்பை உடனடியாக அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதற்கான அறிகுறியாக இது அமைந்துள்ளது.
ஏனெனில் தற்போது இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் கடந்தகால தோல்விகளிலிருந்து ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்குவது இளம் வயதினரின் கையில் உள்ளது. எனவே வருகின்ற 2024 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் இந்திய அணியில் ஷுப்மன் கில் (24), ஸ்ரேயாஸ் ஐயர் (28), இஷான் கிஷன் (25), ருதுராஜ் கெய்க்வாட் (26), காயத்தில் இருந்து மீண்டு வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (21), ரிஷப் பந்த் (26) ஆகியோருடன் இணைந்து இந்தியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஏற்கனவே உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் மட்டுமின்றி, பல சந்தர்ப்பங்களில் தங்களின் திறமையையும் நிரூபித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா, ஸ்ரேயாஸ் ஐயர் இந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான வீரராக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ஷ்ரேயாஸ் ஐயர் தனது அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை முன்வைத்துள்ளார். குறிப்பாக நான்காவது வீரராக ஆடும் லெவனில் களமிறங்கி தனி முத்திரையை பதித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில், அவர் இதேஅளவிலான செயல்திறனைத் தொடர்ந்தால், அவர் இந்திய அணியை வழிநடத்துவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்காது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையைத் தவிர, நடப்பு சர்வதேச சுழற்சியில் (2023 முதல் 2027 வரை) 2025இல் சாம்பியன்ஸ் டிராபி, 2026இல் டி20 உலகக்கோப்பை மற்றும் 2027இல் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா பங்கேற்க வேண்டும். எனவே இத்தகைய சூழ்நிலையில், எதிர்கால அணியை தயார்செய்ய இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும்.
ஏனெனில் நீண்டகாலம் இந்தியாவுக்கு பெரிய வீரர்களின் சேவை இல்லாமல் இருக்கலாம். எனவே, அதிகாரிகள் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .ஜெய்ஸ்வால், கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும். இதனால் ஒரு பெரிய போட்டி வரும்போது அவர்கள் மனதளவில் தயாராக இருப்பார்கள்.
எல்லா வீரர்களுடனும் தெளிவாகத் தொடர்புகொள்வது முக்கியம். உங்கள் செயல்திறன் எதுவாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குவோம் என்று தெரிவியுங்கள். இவ்வளவு காலத்திற்கு நாங்கள் உங்களுடன் இணைந்திருக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அவர்களிடம் சொல்லுங்கள்.
நிச்சயமற்ற தன்மை ஒரு கிரிக்கெட் வீரரின் மனதையும் அதன்மூலம் அவரது செயல்திறனையும் பாதிக்கும் என்பதால், ஒரு வீரரை சுழலில் வைத்திருப்பது முக்கியம். ஆனால் மீண்டும் வெற்றிக்காக அவர்கள் எவ்வளவு பசியுடன் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அது அமையும்” இவ்வாறு உத்தப்பா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இனிவரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்தியஇளம் வீரர்களின் கையிலுள்ளது."