அஹமதாபாத்: இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா- ஷுப்மன் கில் ஜோடியில் ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நிதானமாக விளையாடிய கில் 4(7) ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதேசமயம் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ரோஹித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 47(31) ரன்களில் கௌன் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4(3) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில், 54(63) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜடேஜாவும் 9(22) ரன்களுக்கு வெளியேறினார்.
அதன்பின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த ராகுல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 66(107) ரன்களுக்கு ஆட்டமிழக்க, தெடர்ந்துவந்த முகமது ஷமி 6(10) ரன்களிலும், ஜஸ்ப்ரித் பும்ரா 1(3) ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 18(28) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த குல்தீப் யாதவ் 10(18) ரன்களில் ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர்-டிராவிஸ் ஹெட் ஜோடியில் வார்னர் 7(3) ரன்கள் எடுத்தபோது முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மிட்செல் மார்ஷ் 15(15) ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4(9) ரன்னிலும் என ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினர்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெட்-மார்னஸ் லபுஷாக்னே ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடிய ஹெட் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்த, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறி நின்றனர்.
இறுதியில் முகமது சிராஜ் பந்துவீச்சில் 137(120) ரன்கள் எடுத்திருந்த ஹெட் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை களத்திலிருந்த லபுஷாக்னே 58(110) ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
Be the first to comment on "ஐசிசி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவை தகர்த்த ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது."