சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தது தனித்துவமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழ்ந்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10050013
MUMBAI, INDIA - NOVEMBER 15: Shubman Gill of India bats during the ICC Men's Cricket World Cup India 2023 Semi Final match between India and New Zealand at Wankhede Stadium on November 15, 2023 in Mumbai, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

கொல்கத்தா: மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன்மூலம் உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

நட்சத்திர பேட்ஸ்மேனான கோஹ்லி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 49-வது ஒருநாள் சதத்தை 451-வது இன்னிங்ஸில் எடுத்தார். ஆனால் கோஹ்லி இந்த மைல்கல் சாதனையை தனது 279-வது இன்னிங்ஸிலேயே நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சாதனையை சச்சினின்  மைதானத்திலேயே கோஹ்லி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது.

இதே மைதானத்தில்தான் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதேநாளில் தற்போது கோஹ்லியும் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். சச்சின் சதங்களின் சாதனையை முறியடித்துள்ள கோஹ்லி, அவரது மற்றுமொரு வாழ்நாள் சாதனையையும் தகர்த்துள்ளார். ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை சச்சின் வசம் இருந்தது. அவர், 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் அந்த சாதனையை நடப்பு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 10 போட்டிகளில் 3 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 709 ரன்கள் குவித்து முறியடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 50ஆவது சதம் விளாசிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், கோஹ்லியின் சாதனை மகத்துவமானது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர்,” இது ஒரு சிறந்த இன்னிங்ஸ் மற்றும் 50ஆவது சதம் என்பது மகத்துவமானது. ஒருநாள் போட்டிகளில் இது அபாரமான சாதனை. இந்த சாதனையை யாரேனும் தகர்ப்பார்களா என்று கேட்டால், அது எனக்கு தெரியாது. ஆனால் இதற்கு நிறைய செய்ய வேண்டும். மேலும் கோஹ்லி இன்னும் முடிக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்தியா தற்போது நம்பமுடியாத கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் உட்பட எல்லா வீரர்களுமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக பந்துவீச்சில் வேகம் மற்றும் சுழல் என எல்லாமே சிறப்பாக இருக்கிறது. இது ஒரு முழுமையான அணி. இந்த அணியில் மிகப்பெரிய திறமை உள்ளது. ஆனால் நாம் ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். வரும் போட்டியில் இந்தியா ஜெயிக்கட்டும், பிறகு இறுதிப்போட்டி குறித்து பேசலாம்” இவ்வாறு கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தது தனித்துவமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழ்ந்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*