மும்பை: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -ஷுப்மன் கில் ஜோடியில் அபாரமாக விளையாடிய ரோஹித் ஷர்மா 47(29) ரன்கள் எடுத்தபோது டிம் சௌதீயிடம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவரைத்தொடர்ந்து கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அரைசதம் கடந்தும் அதிரடி காட்டிய கில் 80(66) ரன்கள் எடுத்து காயம்காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பி மருத்துவ உதவிபெற்றார்.
அதன்பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லியும் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சதத்தைப் பதிவுசெய்து புதிய உலகசாதனையை படைத்தார்.
இதையடுத்து கோஹ்லி 117(113) ரன்களுடன் டிம் சௌதீ பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் தனது இரண்டாவது உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்தார். இருப்பினும் ஸ்ரேயாஸ் 105(70) ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் வெளியேற, அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 1(2) ரன்னுடன் டிம் சௌதீயிடம் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 39(20) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவான் கான்வே-ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கேன் வில்லியம்சன் -டெரில் மிட்செல் ஜோடி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி அசத்தினர். இந்நிலையில் 69(73) ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன் ஆட்டமிழக்க, அதே ஓவரில் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மிட்செல் சதம் விளாச, அவருடன் இணைந்த கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 41(33) ரன்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழக்க, மறுபுறம் மிட்செல் 134(119) ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் மார்க் சாப்மேன் 2(5) குல்தீப் சுழலிலும், சான்ட்னர் 9(10) சிராஜ் பந்துவீச்சிலும் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே டிம் சௌதீ 9(10), லோக்கி பெர்குசன் 6(3) ஆகியோரை முகமது ஷமி வீழ்த்தினார். இதனால் 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி நான்காவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.
Be the first to comment on "கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஆகியோரின் அபார சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி."