நியூ டெல்லி: 2023ஆம் ஆண்டு போலவே, 2019ஆம் ஆண்டிலும் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக பலப்பரீட்சை நடத்தின. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 45 நிமிட மோசமான கிரிக்கெட் காரணமாக இந்தியா தோல்வியைத் தழுவி வெளியேறியது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நடந்துமுடிந்த லீக் சுற்றில் ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது. அதேசமயம் வீரர்களின் தன்னப்பிக்கையும், திறமையும் இந்த வெற்றியால் கூடியுள்ளது. இந்நிலையில், அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது போல, நடப்பு தொடரிலும் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்திய அணியைப் போல நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. இதன்காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, நிச்சயம் சவால்களை சந்தித்து வெற்றிகொள்ளும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்த போதிலும் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் உறுதியாக கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர்,”முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இது அரையிறுதிப் போட்டி. எனவே, இந்தியா இன்னும் கவனமுடன் விளையாட வேண்டும். எனினும், தற்போதைய நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன். அதேசமயம் இந்திய அணிக்கு நிர்பந்தங்களோ, சவால்களோ இல்லை என்று சொல்லிவிட முடியாது.
தற்போதைய சூழலில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. இருப்பினும், பேட்ஸ்மென்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விளையாட வேண்டுமென்றால் போட்டிக்கு முந்தைய பயிற்சி மிகமுக்கியமானது. இதுவரையிலான போட்டிகளில் இந்தியா நிர்பந்தங்களை சந்தித்துள்ளது. ஆகையால், இந்திய அணி சிறப்பாகவே செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை. வழக்கமான பயிற்சியே போதுமானது. தற்போதைய நிலையில் பேட்ஸ்மென்கள் அனைவரும் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்தி விளையாடினாலே போதுமானதாக இருக்கும்.
வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சியுடன், நன்கு திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயலாற்றினாலே நியூசிலாந்தை சுலபமாக வெற்றிபெற்று விடலாம். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாட வேண்டும். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் எனக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கிறது” இவ்வாறு ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "அரையிறுதிக்கு முன்னதாக நாக் அவுட் ஆட்டத்தின் அழுத்தம் குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்."