பெங்களூர்: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிக்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- ஷுப்மன் கில் ஜோடி அபாரமான ஆடட்த்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதில் கில் 32 பந்துகளில் அரைசதம் அடித்தபோது வான் மீக்ரன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 44 பந்தில் தனது 55ஆவது அரைசதத்தை விளாசிய ரோஹித் 61(54) ரன்களில் டி லீட் பந்துவீச்சில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகளில் தனது 71ஆவது அரைசத்தை விளாசி அசத்தினார். இருப்பினும் 51(56) ரன்களில் வான் டெர் மெர்வ் சுழலில் வீழ்ந்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர்- கே.எல்.ராகுல் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் 84 பந்துகளில் சதமடிக்க, ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும் இறுதியில் ராகுல் 102(64) ரன்கள் எடுத்தபோது டி லீட் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இதில் ஸ்ரேயாஸ் 128(94) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரரான வெஸ்லி 4(5) ரன்களுடன் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த மேக்ஸ் -அக்கர்மேன் ஜோடியில் அக்கர்மேன் 35(32) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடிவந்த மேக்ஸ் 30(42) ரன்களின்போது ஜடேஜாவிடம் கிளீன் போல்டானார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய சிப்ராண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கேப்டன் எட்வர்ட்ஸ் 17(30) ரன்களுடன் கோஹ்லியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டி லீட் 12(21) ரன்களில் பும்ராவிடம் கிளீன்போல்டாக, மறுமுனையில் 45(80) ரன்கள் எடுத்திருந்த சிப்ராண்ட் சிராஜிடம் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய வான் பீக் 16(15) ரன்கள் சேர்த்து குல்தீப் சுழலில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவர்லேயே 16(8) ரன்கள் எடுத்த டெர் மெர்வே ஜடேஜாவிடமும், இறுதியில் 5(11) ரன்கள் எடுத்த ஆர்யன் தட்டை பும்ராவிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அரைசதம் விளாசிய தேஜா நிடமானுரு 54(39) ரன்கள் எடுத்து ரோஹித் ஷர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் 47.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 9-வது முறையாக வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "ஸ்ரேயாஸ, ராகுல் ஆகியோரின் அதிரடி சதத்தால் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது."