ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034977

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் ஷுப்மன் கில். தொடர்ச்சியான ரன் குவிப்பு மற்றும் நிலையான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுவரும் கில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கில்லுக்கு, ஐசிசியின் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது.  இதற்குமுன் கடந்த ஜனவரி மாதமும் ஐசிசி சிறந்த வீரர் விருது அவர் அளிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் இரண்டு முறை அவ்விருதை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றார்.

இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது மீண்டும் ஒரு சாதனைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார் ஷுப்மன் கில். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில், இந்தியாவின் இளம் வீரரான ஷுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்குமுன் முதலிடத்தில் இருந்துவந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், நடப்பு உலகக்கோப்பைத் தொடரில்  பெரியளவில் சோதிக்க தவறியதால் தன்னுடைய முதல் இடத்தை இழந்துள்ளார். 2021 ஏப்ரல் 14 முதல் அதாவது 951 நாட்கள் கட்டி ஆண்ட முதலிடத்தை பாபர் அசாம் தற்போது இழந்துள்ளார்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில், ஷுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் டி காக் 771 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், விராட் கோலி 770 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 743 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 739 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே இதற்குமுன் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தனர். அந்தப்பட்டியலில் தற்போது ஷுப்மன் கில்லும் இணைந்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உலகக்கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு சிராஜ் முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து கேசவ் மகாராஜ் 694 புள்ளிகளுடனும், ஆடம் ஸாம்பா 662 புள்ளிகளுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளனர். குல்தீப் யாதவ் 661 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் இறங்கி 654 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், முகமது ஷமி 635 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர்களில் ஜடேஜா மட்டுமே முதல் பத்து வீரர்களில்  இடம்பிடித்துள்ளார். ஆனால் அவரும் ஒரு இடம் இறங்கி 225 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*