மும்பை: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 2ஆம் தேதியான இன்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே ஆறு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்றுவரும் இந்திய அணி, நாளைய போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டான ஹர்திக் பாண்டியா கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டு அந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்ட போது, ஹர்திக் பாண்டியாவிற்கு தசைக்கிழிவு ஏற்பட்டதன் காரணமாக அடுத்து சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடும் லெவெனில் இடம்பெறாமல் இருந்தார். எனவே அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரரான சூர்யக்குமார் யாதவ் பிளேயிங் லெவனில் விளையாடியிருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் எப்போது அணியில் இணைவார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ” “அவருக்கு லேசான காயம் தான். தற்போதைக்கு ஹர்திக் பாண்டியா தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையை முடித்துக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில், அதாவது இலங்கை அணிக்கு எதிராக நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியிலும், நவம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் பாண்டியா விளையாட மாட்டார். ஏனெனில் காயத்திலிருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா கடைசி லீக் போட்டியான நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் பங்கேற்பார்.
ஒருவேளை அப்போதும் அவரால் விளையாட முடியவில்லை என்றால் நேரடியாக அவர் முதல் அரையிறுதி போட்டியில் விளையாடுவார்” இவ்வாறு பி.சி.சி.ஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில், அவர் ஆடும் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஹர்திக் பாண்டியா அடுத்த இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது."