மும்பை: இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து கிட்டத்தட்ட அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா நடப்பு உலகக்கோப்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய அணி சவால் நிறைந்த போட்டியை இன்னும் எதிர்கொள்ளவில்லை. கடந்தமுறை இங்கிலாந்துக்கு எதிரான போட்டி சற்று சவாலனதாக இருந்தது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எப்போதும் கடினம். அவர்கள் எப்போதும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
இந்தியா சமபலம் மிக்கதாக உள்ளது. இந்திய அணியில் தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாதது அணிக்கு பின்னடைவாகும். இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போதொல்லாம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். அவர் தற்போது காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருப்பது அணிக்கு சில நேரங்களில் ஆபத்தாக அமையலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் நடப்பு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், 2011 உலகக்கோப்பையை வென்ற இந்தியாவை நாக்பூரில் தோற்கடித்தது போல் இம்முறையும் தென்னாப்பிரிக்கா வென்றால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு உலகக்கோப்பையில் எங்களுடைய அணி குறைவான எதிர்பார்ப்புடன் சென்றது. குறிப்பாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது அணியும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படும் என்பதை நான் அறிவேன். தற்சமயம் தென்னாப்பிரிக்காவிடம் அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருக்கிறது. சொல்லப்போனால் வரலாற்றிலேயே தற்போது இருப்பது தான் தென்னாப்பிரிக்காவின் அதிரடியான மிடில் ஆர்டர்.
குறிப்பாக 4, 5, 6 ஆகிய இடங்களில் விளையாடும் ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அடித்து நொறுக்கும் அபாரமான திறமையை கொண்டுள்ளார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாகும்.
எனவே இனிவரும் போட்டிகளிலும் இப்போது விளையாடுவது போலவே அவர்கள் சுதந்திரமாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். தற்போது தான் ரஃக்பி உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் என்று நான் நம்புகிறேன். 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் விளையாடிய போட்டியில் நாங்கள் வென்றோம். இருப்பினும் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை இந்தியாவை தோற்கடிப்பது தென்னாபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும்” இவ்வாறு கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணியிடம் பிளாக் பஸ்டர் போட்டியை எதிர்பார்க்கலாம் என்று கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்."