டெல்லி: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் 87(101) ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49(47) ரன்களும் குவித்தனர்.
அதிலும் குறிப்பாக 10 பவுண்டரிகள் ,3 சிக்சர்கள் உட்பட 87(101) ரன்கள் குவித்த கேப்டன் ரோஹித் ஷர்மா ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்து தனது 32ஆவது சதமடிக்க தவறினாலும், 54ஆவது சர்வதேச ஒருநாள் அரைசதம் விளாசி அசத்தினார். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்று அசத்தியது.
அதுமட்டுமின்றி இப்போட்டியின் மூலம் சர்வதேச கிரிகெட்டில் 18000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டனாக தனது 100வது ஆட்டத்தை இப்போட்டியின் மூலம் விளையாடி பதிவு செய்துள்ள 36 வயதான கேப்டன் ரோஹித் ஷர்மா 2023ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய பேட்டர் சஞ்சய் மஞ்ச்ரேகர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தியதற்காக வெகுவாக பாராட்டினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றில் விளையாடி இந்திய அணியை மறக்கமுடியாத வெற்றிக்கு உந்தினார் என்று கருதுகிறார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் தொடரின் பேட்டிங் மற்றும் அவரது மகத்துவத்தைப் பற்றி பேசும்போது, அவருடைய மூன்று இரட்டை சதங்களைப் பற்றியும் பேசவேண்டும். சமீபத்தில் ரோஹித் ஷர்மா அதிவேகமாக சதமடித்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப்போட்டி ஒரு சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன – பிற்பகலில் ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. எதிரணியின் பந்துவீச்சு சற்று சவாலாக இருந்தது. அதேசமயம் ஜோஸ் பட்லர் பயன்படுத்திய யுக்திகளும் தரமானவை .அதனால் இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது.
ஆதில் ரஷித் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா விளையாடிய ஷாட் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த சிறிய இடைவேளையில் பவுண்டரியைக் கண்டுபிடிக்க அவர் சக்தியுடன் ஒரு டிரைவ் அடித்தார். அதேசமயம் அவர் மோயீன் அலியை மிட்-ஆஃப் மீது திருப்பத்திற்கு எதிராக அடித்தார். இந்த கலைத்திறன் தான் ரோஹித் ஷர்மாவை வேறுபடுத்துகிறது. ரோஹித் மட்டுமல்ல, ஆறு அல்லது ஏழு இந்திய வீரர்கள் உச்சத்தில் உள்ளனர். நாம் தலைமுறை இடைவெளியைப் பற்றி பேசுகிறோம். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கும் மற்ற அணிகளின் கிரிக்கெட்டுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது” இவ்வாறு மஞ்ச்ரேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மாவின் அசத்தலான ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெகுவாகப் பாராட்டினார்."