லக்னோ: இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா -ஷுப்மன் கில் ஜோடியில் கில் 9(13) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றியும், ஸ்ரேயாஸ் ஐயர் 4(16) ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் அதன்பின்னர் ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் ரோஹித் அரைசதம் விளாச, மறுமுனையில் ராகுல் 39(58) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 87(101) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கி 8(13) ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா எல்பிடபள்யூ முறையிலும், முகமது ஷமி 1(5) ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 49(47) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் களமிறங்கிய ஜஸ்ப்ரித் பும்ரா 16(25) ரன்களில் ரன் அவுட்டாக, அடுத்துவந்த குல்தீப் யாதவ் 9(13) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரரான டேவிட் மாலன் 16(17) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி ஜோ ரூட் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸும் டக் அவுட்டாகி வெளியேற, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவும் 14(23) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர் -மொயீன் அலி ஜோடி ஓரளவு தாக்குபிடித்து ரன்களை சேர்க்க முயற்சித்தாலும் பட்லர் 10(23) ரன்களுக்கும், மொயீன் 15(31) ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கிறிஸ் வோக்ஸ் 10(20) ரன்களும், அடுத்த ஓவரிலேயே லியாம் லிவிங்ஸ்டோன் 27(46) ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் களமிறங்கிய ஆதில் ரஷித் 13(20) ரன்களும், மார்க் வுட் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஐடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றதுடன், தொடர்ச்சியாக 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Be the first to comment on "முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி."