நியூ டெல்லி: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தன்னுடைய சொந்த மண்ணில் இதுவரை பங்கேற்று விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது மட்டுமின்றி, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி மிகவும் எளிதாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள தன்னுடைய 6வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாடுவாரா அல்லது தொடர்ந்து ஷமி மற்றும் சூர்யகுமார் குமார் ஆகியோரே விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தை ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர்“குல்தீப் யாதவ் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இனிவரும் போட்டியில் குல்தீப், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 3 சுழந்பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்களா என்பதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட மாட்டார்கள் என்பதால் இது சாத்தியமாகலாம்.
ஏற்கனவே இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தெடரில் சிறப்பாக விளையாடாத சூழ்நிலையில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகையால் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடுவது மோசமான தேர்வாக இருக்காது. எனவே நீங்கள் முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் பங்கேற்று விளையாடும் அவரை விட கடந்த போட்டியில் பங்கேற்று விளையாடிய முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
ஒருவேளை பிட்ச் சாதாரணமாக இருந்து சுழற்பந்துக்கு சாதகமாக இல்லாமல் இருந்தால் இந்திய அணியில் நான் மாற்றங்களை பார்க்கப்போவதில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான அதே இந்திய அணியின் ஆடும் லெவன் விளையாடலாம். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கலாம்” இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "2023 உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுத்து, அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்."