மும்பை: ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் னகோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அடுத்ததாக இந்திய அணி வரும் அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டியில் வெற்றிபெற்றால் கூட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மீண்டும் எப்போது அணியில் இணைவார் என்ற கேள்வியே அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
ஏனெனில் இதற்குமுன்பு இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தின் போது கால் பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா அந்த போட்டியின் எஞ்சிய இன்னிங்ஸில் இருந்து வெளியேறினார்.
அதன்பின்னர் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் ஆடும் லெவனில் விளையாடியிருந்தார். இதில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா பெங்களூரு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற அவர் மீண்டு வருவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோவில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், அதனைத்தொடர்ந்து நவம்பர் 2-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று, அங்கேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவரும் ஹர்திக் பாண்டியா, நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தான் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் ஏற்பட்ட வீக்கம் குறைந்துள்ளது. அங்கே எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. அவர் விரைவில் குணமடைவார். இருப்பினும் அவரை அவசர அவசரமாக போட்டிகளில் பங்கேற்க வைத்தால், அவருடைய காயம் மோசமாக மாறலாம். அவர் இன்னும் பந்துவீச்சு பயிற்சியில் கூட ஈடுபடவில்லை. அதற்கு சில நாட்கள் ஆகலாம், அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா இழப்பை எப்படி ஈடுகட்டி கடைசி நான்கு லீக் போட்டிகளில் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
Be the first to comment on "காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்டியா அடுத்து நடைபெறவிருக்கும் இரண்டு லீக் ஆட்டங்களில் இருந்தும் விலகினார்."