தரம்சாலா: ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஆணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவான் கான்வே-வில் யங் ஜோடியில் கான்வே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மறுமுனையில் யங் 17(27) ரன்களில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா -டெரில் மிட்செல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.
இந்நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் 75(87) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் டாம் லேதம் 5(7) ரன்களுக்கு எல்பிடபள்யூ முறையில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய கிளென் பிலீப்ஸ் 23(26) ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மார்க் சாப்மேன் 6(8) ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 1(2) ரன்னும், மேட் ஹென்றி ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மிட்செல் 130(127) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே லோக்கி ஃபர்குசன் 1(5) ரன்னுடன் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -ஷுப்மன் கில் ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் 46(40) ரன்கள் எடுத்தபோது லோக்கி ஃபர்குசன் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால் மறுமுனையில் கில் 26(31) ரன்களில் ஃபர்குசனிடம் தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி -ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்ரேயாஸ் 33(29) ரன்கள் எடுத்தபோது ட்ரெண்ட் போல்ட் வீசிய ஷார்ட் பந்திற்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 27(35) ரன்களில் மிட்செல் சாண்ட்னரின் எல்பிடபள்யூ முறையிலும், சூர்யகுமார் யாதவ் 2(4) ரன்களில் ரன் அவுட்டாகியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரைசதம் விளாச, அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கோஹ்லி 95(104) ரன்கள் எடுத்தபோது மேட் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்து தனது 49ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை தவறவிட்டார். இறுதியில் ஜடேஜா 39(44) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, இந்திய அணி 48 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை 20 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ஐசிசி தொடர்களில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Be the first to comment on "கோஹ்லியின் அதிரடியான ஆட்டமும், ஷமியின் அசத்தலான பந்துவீச்சும் நியூசிலாந்தை வீழ்த்த இந்தியாவுக்கு உதவியது."