புனே: ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நேற்று புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ்- தன்சித் ஹாசன் ஜோடி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.
இருப்பினும் 51(43) ரன்கள் எடுத்திருந்த தன்சித் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த நட்சத்திர வீரர்களான கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8(17) மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் 3(13) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த தாஸ் 66(82) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, அடுத்து வந்த தாஹித் ஹிரிடோ 16(35) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த முஷ்பிக்கூர் ரஹீம்-மஹ்முதுல்லா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் 38(46) ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழக்க, தொடர்ந்துவந்த நசும் அகமது 14(18) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் இறுதிவரை போரடிய மஹ்முதுல்லா 46(36) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கொட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -ஷுப்மன் கில் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 48(40) ரன்கள் எடுத்தபோது ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் உலகக்கோப்பை தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் கில் 53(55) ரன்களுடன் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 19(25) ரன்கள் மட்டுமே எடுத்து மெஹதி ஹசனிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி -கே.எல்.ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 26,000 ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
அதன்பின்னரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 48ஆவது சதத்தைப் பதிவுசெய்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 41.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் கோஹ்லி 103(97) ரன்களுடனும், ராகுல் 34(34) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
Be the first to comment on "கோஹ்லியின் அதிரடி சதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா."