நியூ டெல்லி: ஐசிசி 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை பங்கேற்று விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் அபாரமான வெற்றிபெற்றது.
அதேபோல ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் எளிதாக வென்ற இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியிலும் பந்து வீச்சாளர்களின் அட்டகாசமான செயல்பாடுகளால் மற்றுமொரு எளிதான வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக இந்திய பந்துவீச்சாளர்கள் 191 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தானை ரோஹித் ஷர்மா 86 ரன்கள் விளாசி அடித்து நொறுக்கியதால் உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றியை பதிவுசெய்து இந்தியா சாதனை படைத்தது.
தனது சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா குறைந்தபட்சம் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது இப்போதே உறுதியாகியுள்ளது. மேலும் பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் 2011ஆம் ஆண்டு போல இம்முறை நிச்சயமாக சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. அத்துடன் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அனைத்து துறைகளையும் வலுவான செயல்பாடுகளால் பூர்த்தி செய்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ள இந்திய அணியை இத்தொடரில் தோற்கடிப்பது என்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினமான ஒன்று என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதேசமயம் அதிகப்படியான அழுத்தம் கொண்ட நாக் அவுட் போட்டிகளில் இந்தியா வழக்கம் போல சொதப்பாமல் இருக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும் என்று பாண்டிங் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஐசிசி இணையத்தில் பேசிய அவர், “இத்தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவை தோற்கடிப்பது எதிரணிகளுக்கு கடினமாக இருக்கும் என்று நான் சொல்லி வருகிறேன். ஏனெனில் அவர்களின் அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். குறிப்பாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என அனைத்து துறைகளிலும் அவர்கள் பூர்த்தியடைந்துள்ளார்கள்.
எனவே அவர்களை தோற்கடிப்பது என்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அதிகப்படியான அழுத்தம் கொண்ட நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் எப்படி தங்களை தாங்கி நிறுத்துகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் தெரிவித்துள்ளார்."