மும்பை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் தற்போது கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் 128 வருடங்கள் கழித்து முதன்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக மும்பையில் நேற்று நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதன்பின் பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஐசிசியின் தொடர் முயற்சிகளால் 2028 ஒலிம்பிக்கில் லேக்ராஸ், ஸ்குவாஷ், பேஸ்பால், பிளாக் ஃபுட்பால் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது வல்லுனர்களையும், முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் 2028 ஒலிம்பிக்கில் விளையாடப்படவுள்ள 33 விளையாட்டுகளில் இந்த 5 விளையாட்டுகளும் சேர்க்கப்படும் என்று ஒலிம்பிக் வாரியம் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் கிரிக்கெட்டை தெரிவுபடுத்துவதற்காக உலகின் சிறந்த தரமான நட்சத்திர வீரர்கள் பலர் இருந்த போதிலும் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய ரசிகர்களை பெருமைப்படுத்தும் அம்சமாகவும் அமைந்துள்ளது.
உலகளவில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருந்தும் 25,000க்கும் மேற்பட்ட ரன்களையும், 75-க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வரும் விராட் கோலியின் படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2024 டி20 உலகக்கோப்பையிலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குனர் நிக்கோலோ கேப்பிரியணி பெருமதித்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து மும்பையில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “2.5 பில்லியன் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் இரண்டாவது விளையாட்டான கிரிக்கெட்டை நாங்கள் ஆர்வத்துடன் வரவேற்கிறோம். ஏற்கனவே அமெரிக்காவில் மேஜர் லீக் போன்ற தொடர்களால் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அப்போது தான் இங்குள்ள மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இங்கே என்னுடைய நண்பர் விராட் கோலி இருக்கிறார். அவர் சமூக வலைதளங்களில் 340 மில்லியன் ரசிகர்களால் பின்பற்றப்படும் உலகின் 3ஆவது பெரிய விளையாட்டு வீரராக இருக்கிறார். லேப்ரோன் ஜேம்ஸ், டைகர் வுட்ஸ், டாம் ப்ராடி ஆகியோரை பின்பற்றும் ரசிகர்களை விட இது அதிகமாகும். இது கிரிக்கெட் சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அதுமட்டுமின்றி கிரிக்கெட் பாரம்பரிய நாடுகளுக்கு அப்பால் வளர இது உலக அரங்கில் காண்பிக்கப்படும்” இவ்வாறு கேப்பிரியணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "2028 ஒலிம்பிக்கில் இடம்பிடித்த கிரிக்கெட்; இதில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு."