அகமதாபாத்: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 12ஆவது லீக் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு சென்றடைந்துள்ளனர். அதேபோல இந்திய அணி வீரர்களும் அகமதாபாத் நகருக்கு சென்றுள்ள நிலையில், இளம் வீரரான ஷுப்மன் கில்லும் அகமதாபாத் மைதானத்தை வந்து அடைந்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் கில் விளையாடவில்லை. எனவே இவருக்கு மாற்று வீரராக இளம் வீரரான இஷான் கிஷன் களமிறங்கினார்.
அதன்பின்னரும் தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில, டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது லீக போட்டியிலும் கில் பங்கேற்கவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், சென்னையிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் அகமதாபாத்துக்கு கில் புறப்பட்டுச் சென்றார். அகமதாபாத்தில் நாளை நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடவுள்ள நிலையில், கில்லும் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். தற்போது அகமதாபாத்தை அடைந்துள்ள ஷுப்மன் கில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் கில்லின் உடல்நலத்தை பொறுத்தே பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் விளையாடினாலே விஸ்வரூபம் எடுக்கும் ஷுப்மன் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் நடப்பாண்டில் மட்டும் அகமதாபாத் மைதானத்தில் விளையாடியுள்ள கில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை விளாசினார். அதேபோல ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ஷுப்மன் கில் அஹ்மதாபாத் மைதானம் மற்றும் அதன் சூழல்களை நன்கு அறிந்தவர்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலேயே அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளில் ரன்களை குவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 404 ரன்களை குவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடும் அளவிற்கு உடல்தகுதி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும் கில் மேட்சுக்கு பிட்டாக இன்னும் சிறிது காலம் ஆகும். டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை பெற்று, இப்போது தான் வலைப்பயிற்சியை தொடங்கியிருக்கிறார். அவரை உடனே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்குவதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை.
Be the first to comment on "ஷுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பங்கேற்பார்?"