டெல்லி: இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ்-இப்ராஹிம் ஸத்ரான் ஜோடியில் 22(28) ரன்கள் எடுத்திருந்த இப்ராஹிம் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான குர்பாஸ் 21(28) ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், தொடர்ந்து வந்த நட்சத்திர வீரரான ரஹ்மத் ஷா 16(22) ரன்களுக்கு ஷர்துல் தாகூரிடம் எல்பிடபள்யூ முறையிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி-அஸ்மதுல்லா ஒமார்சாய் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒமார்சாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாஹிதியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இந்நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஒமார்சாய் 62(69) ரன்களுடன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாஹிதி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 80(88) ரன்களுடன் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அதிரடி வீரர்களான நஜிபுல்லா ஸத்ரான் 2(8)ரன்களுக்கும், முகமது நபி 19(27) ரன்களுக்கும் பும்ராவிடம் அடுத்தடுத்து விக்கேட்டுகளை இழந்தனர்.
இறுதியில் அதிரடி காட்டிய ரஷித் கானும் 16(12) ரன்களுக்கு பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 30 பந்துளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின்னரும் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த ரோஹித் சர்மா 63 பந்துகளில் தனது 7ஆவது உலகக்கோப்பை சதமடித்து மிரட்டினார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக அதிவேக சதடித்த வீரர் எனும் சாதனையை படைத்ததுடன், உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இதற்கிடையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் 47(47) ரன்களுக்கு ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 131(84) ரன்கள் எடுத்தபோது ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி -ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 55(56) மற்றும் ஸ்ரேயாஸ் 25(23) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 35 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "ரோஹித் ஷர்மாவின் அபார சதத்தால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது."