சென்னை : கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் வெறும் 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46(71) ரன்கள் எடுத்திருந்தார். அதேசமயம் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முதலிரண்டு ஓவரிலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் வேகத்தில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறினர். துவக்க வீரர்கள டக் அவுட்டாவது சகஜம் என்றாலும், இரண்டு பேருமே டக் அவுட்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒருபுறம் களத்தில் நிற்க, நான்காவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து ஹேசில்வுட் பந்துவீச்சில் டக் அவுட்டானார். 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணிக்கு இது பேரிடியாக அமைந்தது.
இதன்காரணமாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமைத்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
இதில் விராட் கோலி 85(116) ரன்களில் ஆட்டமிழந்தாலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ராகுல் 97(115) ரன்கள் குவித்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.
இந்நிலையில் உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுல் 4வது வரிசையில் விளையாட வேண்டும் என்று யுவராஜ் சிங் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தால் அழுத்தத்தை தாங்கி பிடித்து வெற்றிபெற வைப்பதற்கு ராகுல் போன்ற நல்ல ஃபார்மிலுள்ள வீரர் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்று கடந்த வாரம் யுவராஜ் சிங் பேட்டியில் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் இது குறித்து தன் பதிவில் வெளியிட்டுள்ள அவர்,”நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அழுத்தத்தை தாங்க வேண்டும். அந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் இன்னிங்ஸை ஒரு கட்டமைப்பு செய்யும் வகையில் யோசித்து விளையாடியிருக்க வேண்டும்.
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்காம் வரிசையில் கே.எல்.ராகுல் சதமடித்தும், அவரை ஏன் அந்த இடத்தில் தொடர்ந்து ஆட அனுமதிக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை”என இந்திய அணி நிர்வாகத்தை யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Be the first to comment on "ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக சிந்திக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்."