சென்னை: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் உலகக்கோப்பைக்கான 5ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. .
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ்-டேவிட் வார்னர் ஜோடியில் மிட்செல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் -ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 41(52) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 46(71) ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 27(41) ரன்களிலும், அலெக்ஸ் கேரி ரன்கள் ஏதுமின்றி எல்பிடபள்யூ முறையிலும் ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 15(25) ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 8(20) ரன்களுக்கும் ஆடட்மிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் 15(24) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் ஒருசில பவுண்டரிகளை விளாசி 28(35) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஆடம் ஸாம்பா 6(20) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷான், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். அதன்பின் இரண்டாவது ஓவரை வீசிய ஜோஷ் ஹசில்வுட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சிகொடுத்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கோஹ்லி அரைசதம் கடக்க, மறுமுனையில் ராகுலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் தனது 48ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 85(116) ரன்கள் எடுத்தபோது ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை விளாச, மறுமுனையில் பவுண்டரிகளை விளாசிய ராகுலும் 97(115) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 41.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Be the first to comment on "விராட் கோலி- கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார கூட்டணியால் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி"