நியூ டெல்லி: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை பிரச்சாரத்தை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் :8) சென்னையில் தொடங்குகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக 16-வது ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணி சக்திவாய்ந்த அணி இல்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா டுடேவிடம் பேசிய கங்குலி, “ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன். இதுவரை அவர் இரண்டு முறை ஆசிய கோப்பையையும், 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளார். ஒரு கேப்டனாக இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர ரோஹித் நிச்சயம் போராடுவார். இந்தமுறை கோப்பையை வெற்றிகரமாக வென்று முடிப்பார் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதற்குமுன் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்று வரை முன்னேறி தோல்வியுற்றது. எனவே நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், இம்முறை இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
2003 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை வழிநடத்திய கங்குலி, 2023ஆம் ஆண்டு ஐசிசி போட்டித் தொடரில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் மீது ஒரு கண் வைத்திருப்பதாக உறுதியளித்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “பல நல்ல வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் நான் சுப்மான் கில்லை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் அபாரமாக விளையாடியுள்ளார். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ராவும் சிறப்பாக விளையாடி வருகிறார்” என்று கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் அனைத்து வடிவ தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் நடப்பாண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். 2023ஆம் ஆண்டில் தனது இன்னிங்ஸின் பாதியில் அவரால் 50 ரன்களைக் கடக்க முடிந்தது. மொத்தம் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 72.35 சராசரியில் 1230 ரன்கள் குவித்துள்ளார்.
Be the first to comment on "ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரத்தின் மீது சௌரவ் கங்குலி ஒரு கண் வைத்திருக்கிறார்."