அஹமதாபாத்: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (அக்டோபர் 5) தொடங்கவிருக்கும் நிலையில், உலகக் கோப்பையில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. குஜராத்தில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு 10 கேப்டன்களும் அஹ்மதாபாத் வந்திருந்தனர்.
இவர்களுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அனைத்து கேப்டன்களும் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சியை இயான் மோர்கன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தொகுத்து வழங்கினார். இந்த சந்திப்பு சமூக ஊடகங்களின் மூலமாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன்ஸி குறித்து பேசுகையில், “உலகக்கோப்பையில் இந்தியாவை வழி நடத்துவது மிகவும் பெருமையான தருணம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. இந்திய அணியை வழிநடத்துவது எல்லாருக்கும் கிடைத்து விடாத ஒரு வரம்.
இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவோ ஜாம்பவான்கள் இருந்தும் அணியை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. அதுதான் வாழ்க்கை. ஒரு நல்லா அனுபவமிக்க வீரராக அணியை தலைமை ஏற்று வழி நடத்துவது சிறப்பான அனுபவம். கேப்டன்சி என்றால் என்னவென்று தெரியாத ஒரு கட்டத்தில் கேப்டனாக இருப்பதை விட கேப்டன் பொறுப்பு பற்றிய அனுபவம் மற்றும் சிந்தனை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு அணியை வழிநடத்துவதில் மகிழ்ச்சி.
நான் அணிக்கு வந்த போது எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்தார். அதன்பின் 200 போட்டிகளுக்கும் மேல் கேப்டனாக விராட் கோலி பதவி வகித்தார். அவர்களுக்குப் பிறகு நான் தற்போது கேப்டனாக வந்திருக்கிறேன். எல்லோருக்குமே இளம் வயதிலேயே கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கான நேரம் வரும். எனக்கு முன்னால் கேப்டனாக இருந்தவர்கள் கேப்டனாக இருப்பதற்கு தகுதி உடையவர்கள். அதனால் எனது கேப்டன் பதவிக்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். அதில் தவறு எதுவும் இல்லை.
இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாதது குறித்து நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை. அதேசமயம் நடப்பு போட்டியில் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சொல்லப் போவதில்லை. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்யப்போகிறோம், போட்டியை ரசிக்கப் போகிறோம். இந்தசமயத்தில் எங்களால் இதை மட்டும் தான் சொல்ல முடியும்.
ஏனென்றால் இது ஒரு நீண்ட போட்டியாகும், உங்களை விட யாரும் அதிக தூரம் செல்ல முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனவே, ஒரே நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலத்தி, அதன்பின்னர் அங்கிருந்து நகர்வது எங்களுக்கு முக்கியம்” இவ்வாறு புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட கேப்டனின் நிகழ்வில் சர்மா தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்."