இதுவே எனது கடைசி உலகக்கோப்பை தொடர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034895
Ravichandran Ashwin (L), of India, celebrates the dismissal of Kraigg Brathwaite, of West Indies, during day three of the First Test between West Indies and India at Windsor Park in Roseau, Dominica, on July 14, 2023. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

கவுஹாத்தி: ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது தலா 2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணி கவுஹாத்தி மைதானத்தில் நேற்று முன்தினம் (செப்டம்பர்: 30) இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருந்த நிலையில், முதலாவது போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பயிற்சி போட்டிக்கு முன்னதாக தமிழக வீரரான சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் போது காயமடைந்த அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக, பலரும் எதிர்பார்த்து வந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். 

ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், இன்று அணியில் இருக்கிறேன். சூழல்கள் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. என் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை காட்டியுள்ளது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே நான் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். ஏனெனில் என்னுடைய எஞ்சிய கரியரை மகிழ்ச்சியுடன் முடிக்க வேண்டும் அதுமட்டும் தான் தற்போது என் எண்ணமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி தற்போதெல்லாம் நான் பந்துவீச தயாராகும்போது பல வேரியேஷன்களை பயன்படுத்துகிறேன். ஏனென்றால் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் பந்தை இரண்டு புறமும் திருப்ப வேண்டும். அப்படி செய்தால்  பேட்ஸ்மேனை அழுத்தத்திற்குள் கொண்டு வந்து நம்மால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.

தற்போது மிகச் சரியான நேரத்தில் அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி. நிச்சயம் இதுதான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். எனவே இந்த உலகக் கோப்பைத் தொடரை நான் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டியது முக்கியம். அதேசமயம் போட்டியின்போது ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொள்வது மிகவும் முக்கியமாகும். இது போன்ற மிகப் பெரிய போட்டிகளில் அழுத்தங்கள் அதிகம் இருக்கும்” இவ்வாறு அஸ்வின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இதுவே எனது கடைசி உலகக்கோப்பை தொடர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*