ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு மாற்று வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100348954

மும்பை: இந்தியா நடத்தும் 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில், இடம் பெற்றுள்ள 10 அணிகளும் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரையிலான தேதிகளில் விளையாட உள்ளன.

இந்நிலையில் எல்லா அணிகளும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இறுதி அணியை அறிவிப்பதற்கு நேற்று தான் கடைசி நாள் .ஐசிசி விதிமுறைப்படி உலகக்கோப்பை அணியில் எந்த அணிகள் மாற்றம் செய்ய விரும்பினாலும் அதை நேற்று (செப்டம்பர்:28) இரவு 12 மணி வரைக்குள் அறிவிக்க வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலகக் கோப்பைக்கான இறுதி அணியை அறிவிக்காத அணிகளாக இருந்து வந்தன.

ஆனால் நேற்று ஆஸ்திரேலியா அணி தனது 15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது. அந்த அணியில் ஒரேயொரு பிரதான சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா மட்டும் இடம்பெற்று இருந்தார். இந்தநிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான உலகக் கோப்பை இறுதி அணியை இந்தியா எப்பொழுது அறிவிக்கும் என்று கிரிக்கெட் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு நேற்று உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு அறிவித்தது.

ஏற்கனவே ஆசியக் கோப்பை தொடரின் போது உலகக்கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து ஒரே ஒரு மாற்றம்  மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் போது காயம் அடைந்த அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக, பலரும் எதிர்பார்த்து வந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின்,வாஷிங்டன் சந்தர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் கடந்த 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த அஸ்வின் 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இதுவரை அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளும், 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 155 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

Be the first to comment on "ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு மாற்று வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*