ராஜ்கோட்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான தொடக்டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 32 பந்துகளில் அரைசதம் கடந்த வார்னர் 56(34) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த மிட்செல் மார்ஷ் -ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 96(84) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் 74(61) ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அலெக்ஸ் கேரி 11(9), கிளென் மேக்ஸ்வெல் 5(7), கேமரூன் க்ரீன் 9(13) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவுசெய்திருந்த லபுஷாக்னேவும் 72(58) ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் ஸகிரீஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் 31 பந்துகளில் தனது அரைசத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் அதிரடியாக விளையாட முற்பட்ட சுந்தர் 18(30) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் ஷர்மா- விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதில் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 81(57) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த கோஹ்லி 56(61) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 26(30) ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 8(7) ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 48(43) ரன்களில் க்ளீன் போல்டானார்.
இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 2(12), பும்ரா 5(11), சிராஜ் 1(8) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆடட்மிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவீந்திர ஜடேஜாவும் 35(36) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 49.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 286 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா தோல்வியைத் தழுவியது."