இந்தூர்:இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரிலுள்ள ஹோல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 8(12) ரன்களுடன் ஜோஷ் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான ஷுப்மன் கில் -ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபுறம் கில் தனது 6ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார். இருப்பினும் ஸ்ரேயாஸ் 105(90) ரன்களுடன் சீன் அபோட் பந்துவீச்சிலும், கில் 104(97) ரன்களுடன் கேமரூன் க்ரீன் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல்.ராகுல் -இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி வந்த நிலையில், இஷான் 31(18) ரன்களுடன் ஆடம் சாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருக்கு துணையாக சூர்யகுமார் யாதவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இறுதியில் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் 52(38) ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஆட்டமிழக்க, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 72(37) ரன்களுடனும், ஜடேஜா 13(9) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 9(8) ரன்களுக்கும், தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும் பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் -மார்னஸ் லபுஷாக்னே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இப்போட்டியில் 9 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய டேவிட் வார்னர் தனது அரைசதத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் அஸ்வின் 27(31) ரன்கள் எடுத்திருந்த லபுஷாக்னேவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து அஸ்வின் தனது 15ஆவது ஓவரில் 53 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரையும், தொடர்ந்து வந்த ஜோஷ் இங்கிலிஸையும் 6(9) எல்பிடபள்யூ முறையில் வீழ்த்தி அசத்தினார். அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 14(12) ,ஆடம் ஸாம்பா 5(5) ஆகியோரின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற, தொடர்ந்து வந்த கேமரூன் க்ரீன் 19(13) ரன்களுக்கு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த சீன் அபேட்-ஜோஷ் ஹசில்வுட் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய சீன் அபேட் 29 பந்துகளில் தனது முதலாவது சர்வதேச ஒருநாள் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் மறுமுனையில் 23(16) ரன்கள் எடுத்திருந்த ஜோஷ் ஹசில்வுட்டின் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்த, அடுத்த ஓவரிலேயே 54(36) ரன்கள் எடுத்திருந்த சீன் அபேட்டின் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Be the first to comment on "ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது"