கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற 16-வது ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்ட 31 வயதான விக்கெட் கீப்பரும் பேட்டருமான கே.எல். ராகுல், ஆசியக் கோப்பையில் மொத்தம் 4 போட்டிகளில் விளைய்டி 169 ரன்கள் குவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் தொடை பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆறு மாதமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2023 ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால் அதன்பின் கொழும்புவில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றில் மாஸ் கம்பேக் கொடுத்த அவர், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 6ஆவது சதத்தை பூர்த்தி செய்ததுடன் 111(106) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நட்சத்திர பேட்டரான கே.எல்.ராகுல் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் 39(44) ரன்கள் எடுத்து, இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்தார். ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
நேற்று முன்தினம் இத்தொடருக்கான இந்திய அணி குறித்து அறிவித்திருந்த பிசிசிஐ, முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணி மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி என இரு அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிரு ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு ராகுலின் மறுபிரவேசத்தை பிரதிபலிக்கும் வகையில், அவரது ஆட்டம் இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் நாயர் ஸ்ரீசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஃப்ரீ-ஸ்கோரிங் ரன்களை நீட்டிக்குமாறும் கேப்டனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.எல்.ராகுல் போன்ற ஒருவர், அனைத்து ஆட்டங்களிலும் விளையாடி, நாங்கள் பேசிய நிலைத்தன்மையை பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவுக்கு மோசமாக இருக்கும் என்பதை காட்டுங்கள். அவர்களை மனச்சோர்வடையச் செய்யுங்கள். அதேசமயம் நாம் அதை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ரா குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி எந்த வகையான ஆடுகளங்களை அவர்களுக்கு வழங்குகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளது. அதேசமயம், பும்ராவுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் ஓய்வளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது உடல் எப்படி இருக்கிறது என்பதை அவரே தீர்மானிக்கட்டும். முடிவு எடுப்பதற்கும் அவருடைய முன்னுரிமையைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவர் தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.
Be the first to comment on "நியூ டெல்லி: கே.எல்.ராகுலுக்கு முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்."