மும்பை: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரையிலான தேதிகளில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தியா உட்பட இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து என்று மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இதற்குமுன் நடந்துமுடிந்த ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. இதனைத்தொடர்ந்து இம்மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி குறித்து நேற்று பிசிசிஐ அறிவித்தது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் 15 வீரர்களும் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் 17 வீரர்களும் என இரு அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் அறிவித்துள்ளார்.
அதனால் முதலிரு ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 மாதங்களுக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாடுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும், திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன், சூர்யக்குமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஷுப்மன் கில் ஆகியோரும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் உலகக் கோப்பை தொடரில் அறிவிக்கப்பட்ட வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிஙடன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார்"