கொழும்பு: 16-வது ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரர்களான பதும் நிஷங்கா- குஷல் பெரேரா ஜோடியில் பெரேரா ரன் ஏதுமின்றி பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் முகமது சிராஜ் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் பதும் நிசங்காவும் 2(4), மூன்றாவது பந்தில் சதீரா சசமரவிக்கிரமாவும் 0(2), நான்காவது பந்தில் சரித் அசலங்காவும் 0(1), கடைசி பந்தில் தனஞ்ஜெயா டி சில்வாவும் 4(2) என நான்கு வீரர்களையும் சொற்ப ரன்களில் வீழ்த்தி அடுத்தடுத்து வெளியேற்றினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளராக சாதனையை நிகழ்த்தியுள்ள முகமது சிராஜ், அடுத்ததாக ஆறாவது ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை க்ளீன் போல்ட்டாக்கி 16 பந்திலிலேயே 5 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சமிந்தா வாசின் சாதனையையும் சமன்செய்துள்ளார்.
அதன்பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த துனித் வெல்லலகே மற்றும் துஷான் குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து 17 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் அப்போது வந்த சிராஜ், 17(34) ரன்களுடன் மெண்டிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார். இறுதியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் துனித் வெல்லலகே 8(21) ரன்களிலும், பிரேமோத் மதுஷன் 1(6) ரன்னிலும், மதிஷா பத்திரனா ரன் ஏதுமின்றியும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் ஹேமந்தா 13(15) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில்-இஷான் கிஷன் ஜோடி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் இந்திய அணி வெறும் 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது. இதில் கில் 6 பவுண்டரி உட்பட 27(19) ரன்களையும், இஷான் 3 பவுண்டரி உட்பட 23(18) ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 2023 ஆசியக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இது இந்திய அணியின் 8ஆவது ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இவங்கையை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா."