நியூ டெல்லி: 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. அதன்பின் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் நடைபெற்ற தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியையும் எதிர்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி, பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. நேற்று நடந்துமுடிந்த சூப்பர் 4 சுற்றின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடப்பு ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்ட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே, சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து வருவதற்காக காத்திருந்தோம். தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்கானித்து வந்தோம். தற்போது காயத்திலிருந்து பும்ரா குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் நான்கு சிறப்பான பந்துவீச்சாளர்களும் அணிக்கு மீண்டும் திரும்பிவிட்டனர். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான். ஏனெனில் போட்டியின் தேவைக்கேற்ப வீரர்களை பயன்படுத்தி கொள்வதற்கு இது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
முகமது ஷமி போன்ற சிறந்த வீரர் ஒருவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க முடியாதது என்பது சாதரண விஷயம் கிடையாது. இது நாங்கள் எடுத்த கடினமான முடிவு தான். இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அணியின் தேவை என்பது அனைத்தையும் விட முக்கியமானது. எங்கள் வீரர்கள் அனைவருக்கும் இது தெரியும். நாங்கள் அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்களையும், ஆடும் லெவனையும் தேர்வு செய்வோம்” இவ்வாறு ஹம்ப்ரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "மூத்த வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே வெளியிட்டுள்ளார்."