மும்பை : ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியதால் தற்போது இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஆசியக்கோப்பை தொடர் முடிவந்தவுடன், செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 27 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள இந்திய அணி அதன் பிறகே உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையிலான தேதிகளில் நடைபெறவுள்ளது. இதே காலகட்டத்தில் தான் சீனாவின் ஹாங்சு நகரில், ஆசிய விளையாட்டு 19வது சீசன் (செப்: 23- அக்:8) நடைபெறவுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் இந்தத் தொடரில் கிரிக்கெட் போட்டி (டி20) இடம்பெற்றிருக்கிறது. இதற்கு முன் 2010ல் குவாங்சு, 2014ல் இன்ச்சான் என இரு ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஆனால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை.
ஆனால் தற்போது முதன்முறையாக ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் களமிறங்குகிறது. இத்தொடருக்கு இந்திய அணி தங்களுடைய இரண்டாம் தர வீரர்களை அனுப்பி இருக்கிறார்கள். ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பணிபுரிய உள்ளார். அவரைத்தொடர்ந்து ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக தமிழகத்தின் சாய் கிஷோர், சாய் சுதர்சன் ஆகியோர் உள்ளனர். மேலும் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் இருக்க உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரரான சிவம் மவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷிவம் மவி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக காஷ்மீரை சேர்ந்த அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கை சேர்க்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. முதலில் காயம்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பதிலாக காத்திருப்பு வீரர்களில் வைக்கப்பட்டிருந்த யாஷ் தாக்கூரை தான் சேர்க்க தேர்வு குழு முடிவு எடுத்திருந்தது.
ஆனால் அவரும் காயம் காரணமாக விளையாடதால், தற்போது உம்ரான் மாலிக்கிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் ரிசர்வ் வீரர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்களுக்கான இடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட் 15 வீரர்கள் மட்டும்தான் சீனா செல்ல இருக்கிறார்கள்.
இந்தத் தொடரில் இந்திய அணி நேரடியாக கால் இறுதி சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெற்றால் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா தங்கம் வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
Be the first to comment on "இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் காயம், அவருக்கு பதில் காஷ்மீர் வீரர் சேர்க்க வாய்ப்பு."