கொழும்பு: இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் சூப்பர்4 சுற்றின் 4ஆவது போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா-ஷுப்மன் கில் ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில், துனித் வல்லாலகே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 19(25) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 3(12) ரன்னிலும், 53(48) ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவும், துனித் வெல்லாலகே பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.
அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷன்-கே.எல்.ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது இஷான் 33(61) ரன்களில் சரித் அசலங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 39(44) ரன்கள் எடுத்திருந்த ராகுலும், 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஹர்திக் பாண்டியாவும் துனித் வெல்லாலகே பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 4(19), ஜஸ்ப்ரித் பும்ரா 5(12), குல்தீப் யாதவ் 0(1) ஆகியோர் அடுத்தடுத்து சரித் அசலங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அக்ஸர் படேலும் 26(36) ரன்களுடன் மகேஷ் தீக்ஷனா பந்துவீச்சில் வெளியேறினார். இதன்மூலம் இந்திய அணி 49.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களான பதும் நிஷங்கா -திமுத் கருணரத்னே ஜோடியில் நிஷங்கா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த குசால் மெண்டிச் 15(16) ரன்களிலும், கருணரத்னே 2(18) ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 17(31), சரித் அசலங்க 22(35), தசுன் ஷனகா 9(13) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா-துனித் வெல்லாலகே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் 41(66) ரன்கள் எடுத்திருந்த டி சில்வா விக்கெட்டை இழக்க, தொடர்ந்து வந்த மஹீஷ் தீக்ஷனா 2(14), கசுன் ரஜிதா 1(2), மதிஷா பதிரானா 0(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த துனித் வல்லாலகே 42(46) ரன்களைச் சேர்த்த போதும் இலங்கை அணியால் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் 41.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா முன்னேறியது.
Be the first to comment on "குல்தீப் யாதவின் சுழலில் சறுக்கிய இலங்கை, இந்தியா அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது."