கொழும்பு: இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் சூப்பர்4 சுற்றின் 3ஆவது போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு, ரிசர்வ் நாளான நேற்று மாற்றப்பட்டது. இதில் விராட் கோலி 8(16) ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17(28) ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் எற்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி- கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ராகுல் 100 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 84 பந்துகளில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 47ஆவது சதத்தை விளாசி அசத்தினார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்களை குவித்தது. இதில் கோஹ்லி 122(94) ரன்களும், ராகுல் 111 (106) ரன்களும் குவித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திருந்தனர். அதேசமயம் இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனை ஒன்றையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக படைத்திருக்கிறது.
இதனைத்தொடர்ந்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏனெனில் தொடக்க வீரரான இமாம் உல் ஹக் 9(18) ரன்களிலும், தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் ஆசாம் 10(24) ரன்களிலும், முகமது ரிஸ்வான் 2(5) ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமானும் 27(50) ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அகா சல்மான்- இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினர். இறுதியில் களமிறங்கிய பாஹீம் அஷ்ரப் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோராலும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவருடன் பும்ரா, ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, இந்தியா அபார வெற்றிபெற்று அசத்தியது."