டெல்லி: 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து 2023 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக காயம் காரணமாக அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல் தற்போது ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் உத்தேசித்து உள்ளனர். இந்திய அணியில் தனக்கான இடத்தை மிகவும் போராடித்தான் ராகுல் பெற்றார். பல ஆர்டரில் பேட்டிங் செய்த அவர் ஐந்தாம் இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை அணியில் உறுதி செய்திருந்தார். அதேசமயம் கீப்பிங் செய்வதிலும் சிறந்து விளங்கினார்.
ஆனால், ஐபிஎல் தொடருக்கு பின் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அணியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் பிளையிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.
இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சற்று தடுமாறினாலும், தொடக்க வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் தொடர்ந்து ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்தார். இதனைத்தொடர்ந்து ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நேரத்தில், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்த இஷான் கிஷன் அற்புதமாக விளையாடி 82 ரன்கள் குவித்து அணியைக் காப்பாற்றினார்.
இதனால் இஷானை அணியில் தொடர்ந்து ஆட வைக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், முதன்மை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கின்ற நிலையில், இருவரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் யாரை எடுப்பது என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? என்கின்ற பெரிய குழப்பத்திற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்,”கே.எல்.ராகுலுக்கு பதில் இஷான் கிஷனை அணியில் ஆட வைக்கவில்லை என்றால் இந்திய அணி மிகப் பெரிய தவறை செய்ததாக அமையும்” என்று கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,”ஒருநாள் போட்டியின் தன்மையை இஷான் கிஷன் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார் .ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர் அணியில் இடம்பெறும் போது அழுத்தம் நிறைய இருந்திருக்கும். இருப்பினும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசியுள்ளார். எனவே அவரை அணியிலிருந்து நீக்கக் கூடாது” என்று தனது யூடுயூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மாவுக்கு கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்."