டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியை செப்டம்பர் 5ஆம் தேதியன்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார்.
இத்தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறப்பு பேட்டராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயத்திலிருந்து மீண்டுவந்த கே.எல் ராகுலுடன் இஷான் கிஷானும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக களமிறங்குவதில் இந்த மூன்று பேட்டர்களுக்கு இடையேதான் போட்டியாக இருக்கும். ஏனெனில் 2023 ஆசியக் கோப்பை தொடரில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5வது இடத்தில் கிஷன் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். அதேசமயம் 4வது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பெரியளவில் ஸ்கோர் செய்யத் தவறினார்.
ஆனால் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள கே.எல்.ராகுல், 2023 ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறவில்லை. தற்போது சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ளதால் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்ய அணி நிர்வாகம் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நான்காவது வீரராக களமிறங்க இவ்விரண்டு பேட்டர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “நான்காவது இடத்தில் களமிறங்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் இடையே தான் போட்டியாக இருக்கும். நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் இருக்கும் ஃபார்மில் ஒரு பேட்டராக அணியில் நிலைத்துள்ளார்.
அதேசமயம் ராகுல் மற்றும் இஷான் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளதால், இஷான் விக்கெட்டுகளை கைப்பற்றுவது நல்லது. ஏனெனில் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சனையாக இருக்கலாம். எனவே இஷான் விக்கெட் கீப்பராக செயல்படுவதே அர்த்தமுள்ளதாக இருக்கும்” இவ்வாறு கவாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கே.எல்.ராகுல் குறித்து பேசிய கவாஸ்கர்,”ராகுல் அபாரமான பேட்டிங் திறனை கொண்டவர். நீங்கள் சிறந்த பேட்டராக இருக்கும்போது, உங்களுக்கு கொஞ்சம் தளர்வு கிடைக்கும். அதுதான் இப்போது நடந்துள்ளது. காயம் காரணமாக அவர் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பது சற்று கவலையாக இருக்கலாம். ஆனால் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர், தற்போது ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு இனிவரும் போட்டிகளில் விளையாடி, தனது உடற்தகுதியை அனைவருக்கும் வெளிப்படுத்தவார்” என்று கூறினார்.
Be the first to comment on "நான்காவது வீரராக களமிறங்க கடும்போட்டி இருக்கும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்."