இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100348932
India players celebrates the wicket of Aasif Sheikh of Nepal during the Asia Cup 2023 cricket match between India and Nepal held at the Pallekele International Cricket Stadium, Kandy, Sri Lanka on the 4th September, 2023. Photo by: Vipin Pawar / CREIMAS / Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

பல்லகலே: இந்தியா- நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது பல்லகலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பத்துவீச்சை  தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நேபாள் அணியின் குஷால் புர்டெல் -ஆசிப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.

அதன்பின்னரும் அதிரடியாக விளையாடிவந்த குஷால் புர்டெல் 38(25) ரன்கள் எடுத்தபோது ஷர்தல் தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பீம் ஷர்க்கி 7(17), கேப்டன் ரோஹித் பௌடல் 5(8), குஷால் மல்லா 2(5) ஆகியோர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் ஷேக் தனது 10 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இருப்பினும் ஆசிப் 58(97) ரன்களுடன் முகமது சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வந்த குல்ஷன் ஜாவும் 23(35) ரன்களுக்கு சிராஜிடமே ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த திபேந்திர சிங் ஐரி -சோம்பால் கமி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இந்நிலையில் ஐரி 29(25) ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கட்ட கமி 48(56) ரன்களில் மகமது ஷமியிடம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் களமிறங்கிய சந்தீப் லமிச்சனே 9(17) ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாக, அடுத்துவந்த லலித் ராஜ்பன்ஷி ரன்கள் ஏதுமின்றி வெளியேறினார். இதனால் நேபாள் அணி 48.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா-சுப்மன் கில் ஜோடி 2.1 ஓவர்களில் 17 ரன்கள் சேர்த்திருந்த போது கனமழை பெய்ய தொடங்கியது.

சுமார் 1.30 மணி நேரம் நீடித்த மழையால் இப்போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் ரோஹித் சர்மா -ஷுப்மன் கில் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.

அதன்பின்னரும் தொடர்ந்து இருவரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ரோஹித் ஷர்மா 74(59) ரன்களையும், ஷுப்மன் கில் 67(62) ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

Be the first to comment on "இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*