நியூ டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023 ஆசியக் கோப்பையின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன்பின் இலக்கை துரத்திக்கொண்டு பாகிஸ்தான் களமிறங்கும் போது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதில் டாப் ஆர்டர் பேட்டர்களான கேப்டன் ரோஹித் சர்மா 11(32), சுப்மன் கில் 10(32), விராட் கோலி 4(7), ஸ்ரேயாஸ் ஐயர் 14(9) ஆகியோர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இந்நிலையில் டாப் ஆர்டர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனில் கவாஸ்கர், “ரோஹித் ஷர்மா விராட் கோலி ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக தங்கள் கால்களை கொஞ்சம் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். ரோஹித் சர்மாவின் கால் மற்றும் பேட் இடையே பெரிய இடைவெளி இருந்தது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று துரதிர்ஷ்டவசமானவர். ஏனெனில் அவர் விளாசிய ஹூக் ஷாட் நேராக பீல்டரிடம் சென்றது. ஃபீல்டர் 5 மீட்டர் இடது அல்லது வலது பக்கம் இருந்திருந்தால், அது ஒரு பவுண்டரியாக மாறியிருக்கும்.
ஷுப்மான் கில், சில காரணங்களுக்காக மிகவும் அடக்கமாக காணப்பட்டார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது போல் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு நிச்சயமற்ற நிலையில் இருந்ததுபோல் தோன்றியது. எங்களுக்குத் தெரிந்த ஷுப்மான் கில்லை நாங்கள் பார்க்கவில்லை, அவர் நீண்ட காலமாக உலகக்கோப்பையில் தனக்கான இடத்தை இன்னும் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் மிடில் ஆர்டர் குறித்து கவாஸ்கர் பேசுகையில்,”ஐந்தாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், 101.23 ஸ்டிரைக் ரேட்டில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உட்பட 82(81) ரன்கள் எடுத்தது பாராட்டுக்குரிய விஷயம். இதில் அவர் சுட்டிக்காட்டியது என்னவென்றால், ஒரு தொடக்க ஆட்டக்காரர் கீழே எந்த ஆர்டரிடல் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் ஒரு மிடில்-ஆர்டர் பேட்டர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது அவ்வளவு எளிதானது காரியம் அல்ல. அதேசமயம் டாப் ஆர்டரில் களமிறங்கிய 4 வீரர்களும் வலதுகை பேட்டர்கள். ஆனால் இடதுகை பேட்டரான இஷான் ஐந்தாவதாக களமிறங்கும் போது பந்துவீச்சாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது.
விரைவாக செயல்படுத்தும் திறன் பெற்றுள்ள அவர், தோற்றத்தில் மிகவும் சிறியவராக இருந்தாலும், இரண்டு பெரிய சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவர் பேட்டிங் செய்த விதமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. அவர் அணியின் நிலையை உணர்ந்து, தேவைப்படும்போது விழிப்புடன் செயல்படுகிறார். அதேபோல 87(90) ரன்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன சூழ்நிலை, எப்படி ஆட்டத்தை சரிசெய்வது என்பது தெரியும். அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இஷானை வழிநடத்தினார். அதனால் அது மிக மிக நல்ல பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. அந்த பார்ட்னர்ஷிப் இல்லாவிட்டால் இந்தியா 175 அல்லது 200 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும்” இவ்வாறு கவாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர்கள் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்."