நியூ டெல்லி: 2023 ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியது. இத்தொடரில் நாளை (செப். 2) இந்திய அணி தனது முதல் போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மேலும் காயம் காரணமாக சில மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
பும்ரா அணியில் இல்லாதபோது முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர். இந்திய அணிக்கான தொடக்க ஓவர்களை வீசினர். தற்போது பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது போட்டியில் பும்ராவுடன் இணைந்து புதிய பந்தில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அணியின் தேவைக்கேற்ப பழைய பந்து அல்லது புதிய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்து வீசுவதில் எனக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. இந்த விஷயத்தில் நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் மூவரும் (ஷமி,பும்ரா, சிராஜ்) சிறப்பாக பந்து வீசுகிறோம். எனவே அது நிர்வாகத்தைப் பொறுத்தது. நான் அணியின் தேவைக்கேற்ப புதிய அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக உள்ளேன். சிவப்பு பந்து மற்றும் வெள்ளைப் பந்து தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது.
நீங்கள் எப்போதும் சரியான இடத்தில் பந்துவீசினால் எந்த நிற பந்து என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உங்களுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுத்தால் போதும் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். ஏற்கனவே ஆலூரில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமில் இந்திய அணியினர் பல பயிற்சிகளை மேற்கொண்டு, அனைத்து உத்திகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் போட்டியில் கவனமாக செயல்பட வேண்டும். சூழ்நிலையைப் பற்றி நாம் அதிகம் அலச வேண்டும். நாங்கள் எப்போதுமே போட்டிக்கு தயாராக இருப்போம். எங்களிடம் திறமையான பந்துவீச்சு வரிசை உள்ளது. எனவே நாங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை.
சில சமயங்களில், இந்த வீரர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நீங்கள் உணர்வீர்கள். அப்படி ஒரு வீரர் தான் பும்ரா. அவரைப் போன்ற ஒரு நல்ல வீரரின் இழப்பை நாங்கள் பலமுறை உணர்ந்துள்ளோம். தற்போது பும்ரா காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா இடம்பெற்றிருப்பது இந்திய அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். ஏனெனில் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார்” இவ்வாறு ஷமி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்- முகமது ஷமி"