நியூ டெல்லி: இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 2023 ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில், இந்தியா அணி விளையாடும் போட்டிகள் வரும் செப்டம்பர் 2 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஆசிய கோப்பையிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்துமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இருப்பினும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ள நிலையில், அணியில் மாற்று வீரர்கள் இடம்பெற்று வருவதால், இந்தியாவை பாகிஸ்தான் நிச்சயம் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சவால் விடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஆகிய 3 தரமான பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்று அந்நாட்டு ரசிகர்களும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் எத்தனை அசாதாரண பந்துவீச்சாளர்கள் வந்தாலும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக நின்று இந்தியாவை காப்பாற்றி வெற்றி பெற வைப்பார் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாதாரணமாகவே வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள விராட் கோலி 2022 டி20 உலகக்கோப்பை போட்டியில் தனி ஒருவனாக வீழ்த்தியதை சுட்டிக்காட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், இதுகுறித்து கூறுகையில்“ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அபாரமாக விளையாடினார்.
கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் என்று வரும் போது மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பொறுப்புடன் விளையாடி தான் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கிறார்” 2022 ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய அவர், அதே வேகத்தில் டி20 உலகக் கோப்பையிலும் அபாரமாக செயல்பட்டார். அதற்குமுன் சுமாராக செயல்பட்ட கோஹ்லி, ஆசியக் கோப்பையில் ஃபார்முக்கு திரும்பியது முதல் நிற்காமல் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த நினைவு நிச்சயமாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மனதில் இன்னும் இருக்கும். ஆகையால் கோஹ்லி எவ்வளவு முக்கியமான விக்கெட் என்பதை அவர்களுக்கும் தெரியும்.
மேலும் அவருடைய விக்கெட்டை கைப்பற்றினால் இந்திய அணியை எளிதில் வென்று விடலாம் என்பது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாகத் தெரியும். அதேசமயம் நசீம் ஷா, ஹரிஷ் ரவூப், ஷாஹின் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் பவுலர்கள் எப்படி பந்துவீசுவார்கள் என்றும், அவர்களுடைய பலம் மற்றும் பலவீனமும் விராட் கோலி நன்றாக அறிவார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் விராட் கோலி அபாயகரமானவராக இருப்பார்” இவ்வாறு முகமது கைஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு கோஹ்லி ஆபத்தானவராக இருப்பார் என்று முகமது கைஃப் கூறுகிறார்."