10 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்

பாகிஸ்தான் மண்ணில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். 2009-ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடிய போது அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் இலங்கை வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். இதன் பின்னர் பாதுகாப்பு அச்சத்தால் முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தன. ஒரு சில குறுகிய கால தொடர்கள் அங்கு நடந்தாலும் அந்த அணிக்குரிய டெஸ்ட் போட்டிகள் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 10 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் இலங்கை அணி தைரியமாக பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இலங்கை வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தை சுற்றி ராணுவ ஹெலிகாப்டரும் வலம் வருகிறது.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில் ‘இது வரலாற்று சிறப்பு மிக்க போட்டி. இந்த டெஸ்ட் தொடரை நினைத்து எங்கள் வீரர்கள் அனைவரும் பரவசத்துடன், உணர்ச்சிபெருக்கில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சொந்த ஊர் மைதானத்தில் விளையாட இருப்பது சிறப்பு வாய்ந்தது.
உலக கோப்பை போட்டி வரை உங்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் இப்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்று இருக்கிறார். அவர் இலங்கை அணியுடன் இருப்பது தொடரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துமா? என்று அசார்அலியிடம் கேட்ட போது, ‘மிக்கி ஆர்தர் கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் அணியினருடன் இணைந்து பணியாற்றி இருப்பதால் எங்களை பற்றி அதிகமாகவே அவருக்கு தெரியும். எனவே எங்களுக்கு எதிராக அவர் எத்தகைய யுக்தியை தீட்டினாலும் அந்த சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.

குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றது. இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி ராவல்பெண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.

Be the first to comment on "10 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்"

Leave a comment

Your email address will not be published.


*