முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்- ராகுல் டிராவிட்

www.indcricketnews.com-indian-cricket-news-10034882

பெங்களூர்: மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி வீரர்கள், அதன்பிறகு ஆசியக் கோப்பை 2023 தொடருக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒன்று கூடினர். அங்கு வீரர்களுக்கு யோ யோ என்று சொல்லப்படும் உடல் தகுதியை நிரூபிக்கும் பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, பயிற்சி போட்டியும் நடத்தப்பட்டது.

ஆசியக்கோப்பை தொடரில், யார் யாருக்கு எந்த எந்த இடம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், போட்டி நடைபெறும் போது வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 7 ஆசியக் கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி , தற்போது 16ஆவது எடிஷனுக்கான ஆசியக் கோப்பை தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இன்று (ஆகஸ்ட் 30) முதல் தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசியக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அதேசமயம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கிறது. இதனால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அதில் கே.எல்.ராகுல் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட கே.எல்.ராகுல் நீண்டநாள் ஓய்விற்குப் பிறகு அகாடமியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதோடு, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் மீது பெங்களூர் கிரிக்கெட் அகாடமியும் முழு கவனம் செலுத்தி, அவருக்கு என்று அதிக நேரம் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், “கே.எல்.ராகுல் எங்களுடன் ஒருவாரம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். காயத்திலிருந்து முன்னேறி வரும் அவர், சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் தற்போது காயத்தினால் ஏற்பட்ட சிறு தொந்தரவு காரணமாக ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார்.

அவர் தொடர்ந்து பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொள்வார். நாங்கள் செப்டம்பர் 4ஆம் தேதி அவருடைய காயத்தின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, அவர் அணியில் இடம்பெறுவது குறித்து தெரிவிப்போம்” இவ்வாறு ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்- ராகுல் டிராவிட்"

Leave a comment

Your email address will not be published.


*