இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100341164

மும்பை: ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெறவிருக்கும் இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. இத்தொடருக்கான இந்திய அணியில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயமடைந்து அதன்பிறகு ஐபிஎல் தொடரையும் தவறவிட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இவரைப்போலவே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தொடையில் காயமடைந்து பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல் காயம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரில் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு குணமடைந்து இருந்தாலும் அவருக்கு சிறிது நிக்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இவருக்கு பேக் அப் வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆசியக் கோப்பைக்கான தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெஜெண்ட் கபில்தேவ் இதுகுறித்து கூறுகையில், “ஒவ்வொரு வீரரும் சோதிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பை தொடர் மிக அருகில் இருக்கிறது. நீங்கள் இவர்களுக்கு விளையாட வாய்ப்பளிக்காமல் இருந்தால், இவர்கள் நேராக உலகக்கோப்பைக்குச் சென்று காயமடைந்தால் என்ன செய்வது? இதனால் ஒட்டுமொத்த அணியும் பாதிக்கப்படும். ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பைக்கு முன்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சில மணி நேரங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் காயம் இருக்கிறதா இல்லையா என்று தெரியும். அவர்களுக்கும் ஃபார்ம் கிடைக்கும்.

உலகக் கோப்பையின் போது இந்த வீரர்கள் காயமடைந்தால், அது அணியில் இடம்பெறாமல் உலகக் கோப்பையை தவறவிட்ட வீரர்களுக்கு அநீதியாகிவிடும். காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் வீரர்களின் காயம் குறித்து தெரியும். அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் உலகக் கோப்பையில் விளையாடலாம், ஒருவேளை இல்லாவிட்டால் அவர்களை உடனடியாக நீக்கிவிட்டு புதிய வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.  ஏனெனில் இங்கு திறமைக்கு பஞ்சம் கிடையாது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்க, ஆசியக் கோப்பை தொடர் ஒரு சிறந்த களமாக இருக்கும். ஆசியக் கோப்பையில் விளையாடி இந்திய வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். இதில் ஏதேனும்  கேள்விக்குறி இருந்தால், இவர்கள் அணியில் இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் காயத்திற்குபின் அணிக்கு திரும்பியுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு மட்டுமல்ல தேர்வாளர்களுக்கும் நீங்கள் செய்யும் அநீதியாகும். இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு, நீங்கள் சிறந்த மற்றும்  தகுதியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்” இவ்வாறு கபில்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*