மும்பை: இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையிலான தேதிகளில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணி வீரர்களும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில்லும், ரோஹித் ஷர்மாவும் இணைந்து இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பது முறை 76.1 சராசரியுடன் 685 ரன்கள் அடித்திருக்கிறார்கள். மேலும் அவர்களது பார்ட்னர்ஷிப்பை ஒன்றாக எடுத்துக்கொண்டால், அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 85.37 ஆகும். இந்நிலையில் கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து பேட்டிங் செய்வது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய இளம் வீரரான ஷுப்மன் கில், “ரோகித் ஷர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவதை நான் மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.
ஏனெனில் பந்துவீச்சாளர்களின் கவனம் முழுவதும் ரோகித் ஷர்மா மீது தான் இருக்கும். எப்போதுமே மற்ற வீரர்கள் அவர்களுடைய திறமையை முழுசாக வெளிப்படுத்தி விளையாடுவதற்கு ரோகித் ஷர்மா உறுதுணையாக நிற்பார். நாம் எப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு அவர் தடையாக நிற்கமாட்டார். அவர் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதன் மூலம், நாம் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை நம்மால் செய்ய முடியும். நான் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் போது நீ சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதியுடைய வீரர் என்று ரோகித் சர்மா என்னிடம் தெரிவித்தார்.
அவர் என்றும் அனைத்து வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக விளையாடும் போது இளம் வீரரான நமக்கு இவ்வளவு பெரிய போட்டிக்கு நாம் தகுதியான ஆட்களா இல்லையா என்றவொரு சந்தேகம் ஏற்படும். அப்போது ரோஹித் ஷர்மா தரும் அட்வைஸ் நமக்கு ஊக்கத்தை கொடுக்கும். ரோகித் ஷர்மா விளையாடும் விதமும், என்னுடைய விளையாடும் விதமும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.
அவர் எப்போதும் பவர் பிளேவில் தூக்கி அடிக்க பார்ப்பார். ஆனால் நான் பில்டர்களுக்கு இடையேவுள்ள கேப்பை பார்த்து பவுண்டரி அடிக்க முயற்சி செய்வேன். அதேசமயம் ரோஹித் ஷர்மா சிக்ஸர் அடிக்க முயற்சி செய்வார். எங்களுடைய இருவரின் பார்ட்னர்ஷிப்பும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது” இவ்வாறு ஷுப்மன் கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ரோஹித் ஷர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்."