இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு முன்னாள் இந்திய பயிற்சியாளர் தீர்வு அளித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100341101

மும்பை: இந்தியாவில் நடப்பாண்டு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், எந்தெந்த வீரர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யப்போகிறது என்ற குழப்பமும் அதிகளவில் நீடித்து வருகிறது.

ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பது தற்போது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவுள்ளது. அதோடு உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால், அத்தொடரில் விளையாடும் அணியே பெரும்பாலும் உலகக்கோப்பை தொடருக்கான அணியாக இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “கே.எல் ராகுல் தற்போது தான் மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை அவர் ஆசியக்கோப்பை தொடரில் இடம்பெறுவது கடினம். ஏனெனில் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் உடனே அவரது பேட்டிங் திறனை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாத காரியம். அதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் செயல்படுவார் என்று நினைக்கிறேன்” இவ்வாறு சாஸ்திரி கூறினார்.

மேலும் எந்தவொரு வலிமையான அணிக்கும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் குறைந்தது இருவராவது இருப்பதும், ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இருப்பதும் மிக மிக முக்கியமானது. தற்போதைய இந்திய அணியை எடுத்துப் பார்த்தால் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு யாரும் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவேளை ஜடேஜாவும் ஆறாவது பேட்ஸ்மேனாகத்தான் களமிறங்குவார் என்றால், அதற்குள் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மிக வசதியாக செட்டில் ஆகிவிடுவார்கள்.

இந்நிலையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,”நமது அணியில் ஜடேஜா இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். அதேசமயம் நமது அணியின் துவக்க இடத்திலும், நடு வரிசையிலும் இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும். தொடக்க வீரராக இஷான் கிஷான் சரியானவராக இருப்பார். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் அவர்தான் தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ள இஷானுக்கு விக்கெட் கீப்பர் என்ற இடத்தையும் தர வேண்டும். ஆனால் நடுவரிசையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனை தேடுவதில்தான் இந்திய தேர்வுக்குழுவுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. 

நான்காவது இடத்திற்கு ஒரு இடதுகை பேட்ஸ்மேனை தேடும் பொழுது, யார் அதிக ரன்களை குவிப்பார்களோ அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். என்னை பொருத்தவரை திலக் வர்மா மிகச்சரியானவராக இருப்பார். எந்தவித சந்தேகமும் இல்லாமல் இவரை நடுவரிசையில் விளையாட வைக்கலாம். அவர் தன்னை தேர்ந்தெடுப்பதற்கான திறமையை இந்திய அணியில் வெளிப்படுத்தியும் உள்ளார்” இவ்வாறு சாஸ்திரி செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு முன்னாள் இந்திய பயிற்சியாளர் தீர்வு அளித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*