ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக ராகுல் டிராவிட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034904

புளோரிடா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை இழந்தது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி அடுத்து இரண்டு போட்டிகளை வென்று தொடருக்குள் திரும்பி வந்த நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனால் இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராண்டன் கிங் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 18வது ஓவரிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 3- 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி பறிகொடுத்துள்ளது குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமின்றி இந்திய அணியையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரையிலான தேதிகளில் ஆசியக் கோப்பை தொடரும்,  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையிலான தேதிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் இத்தோல்வி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்து ஓய்வு என இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் உள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் இஷான் ஆகியோர் அணிக்கு கிடைத்துள்ளனர். எனினும், மிடில் ஆர்டரில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இரண்டு நட்சத்திர பேட்டர்களும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான்  ஆசியக் கோப்பையைப் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. காயம் காரணமாக சிகிச்சையில் இருக்கும் சில வீரர்கள், காயத்திலிருந்து மீண்டு வருவதால் முதலில் அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஆகையால் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாம் நடத்தவுள்ளோம். அங்கு ஆசியக் கோப்பைக்கு தயாராகும் ஒரு நாள் இந்திய அணியாக செயல்படுவோம். என்ன வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் ” இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக ராகுல் டிராவிட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*