கயானா: இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங் -கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மேயர்ஸ் 25(20) ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்து அதிரடி காட்டிய ஜான்சன் சார்லஸும் 12(14) ரன்களுக்கு குல்தீப் யாதவிடம் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தனார். இருப்பினும் பூரன் 20(12) ரன்களுக்கு குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 42(42) ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் வீசிய அதே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச, மறுபுறம் ஷிம்ரான் ஹெட்மையர் 9(8) ரன்களுக்கு முகேஷ் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. இதில் பாவெல் 40(19) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார் .
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஏனெனில் அறிமுக வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1(2) ரன்னுடன் ஒபெத் மெக்காய் பந்துவீச்சிலும், ஷுப்மன் கில் 6(11) ரன்னுடன் அல்ஸாரி ஜோசஃப் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ்- திலக் வர்மா ஜோடியில் சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பியதற்கு ஈடுகொடுக்கும் வகையில், தனது வழக்கமான 360 டிகிரி ஷாட்களை இப்போட்டியில் விளாசி மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மேலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ், 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83(44) ரன்கள் எடுத்திருந்தபோது அல்ஸாரி ஜோசஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுமுனையில் வழக்கம்பொல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 49(37) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை உறுதிசெய்ய, அவருக்கு உறுதுணையாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதனால் இந்திய அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரில் நீடிக்கிறது.
Be the first to comment on "360 டிகிரியில் மிரட்டிய சூர்யக்குமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால், மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி."