நியூ டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக சில கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ,”சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர, மற்ற இரண்டு வடிவங்களிலும் இந்திய அணி மிகவும் சாதாரணமாக உள்ளது.
பணமும் அதிகாரமும் இருந்தபோதிலும், நாம் சாதாரணமானதைக் கொண்டாடப் பழகிவிட்டோம். ஆகையால் நாம் தற்போது சாம்பியனாகும் வாய்ப்பிற்கு வெகு தொலைவில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,”மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்பை இழந்தது. தொடர் மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால், இந்திய அணியின் பிரகாசமான வெற்றி பறிபோனது. இதற்குமுன், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது.
அதுமட்டுமின்றி, கடைசியாக நடந்து முடிந்த இரண்டு டி20 உலகக் கோப்பைகளிலும் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. நாங்கள் இங்கிலாந்து போன்ற உற்சாகமான அணியும் இல்லை. ஆஸிதிரேலியா அணியை மிருகத்தனமான அணியும் இல்லை. ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக விளையாடுகிறது. அதேபோல தான் இந்திய அணியும் விளையாடுகிறது. ஆனால் அவர்களின் அணுகுமுறை மற்றும் மனப்பான்மை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைவான செயல்திறனுக்கான காரணியாகும்,” என்று மூத்த கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சமீபத்திய சராசரி செயல்திறன் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெற்ற பெரும் தோல்வியின் பின்னணியில் இந்த கருத்துக்கள் நிலவி வருகின்றன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க நிர்வாகம் முடிவு செய்தது. எனவே, ஹர்திக் பாண்டியா அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, முதல் ஒருநாள் போட்டியைப் போலவே, இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெறும் நல்ல நிலையில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், ரோமாரியோ ஷெப்பர்ட் மற்றும் குடாகேஷ் மோட்டியின் சிறப்பான ஆட்டத்தால் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் வேகம், பவுன்ஸ், டர்ன் என இந்திய அணியின் மிடில் ஆர்டர் முற்றிலும் சரிந்தது. இதனால் இந்திய அணி 40.5 ஓவர்களில் வெறும் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதலாவது போட்டியுடன் ஒப்பிடும்போது இந்திய பந்துவீச்சாளர்கள் அவ்வளவு திறம்பட செயல்படவில்லை. நடப்பாண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன், இந்த தோல்வி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
Be the first to comment on "இந்திய கிரிக்கெட் அணி குறித்து வெங்கடேஷ் பிரசாத் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."