பார்பிடாஸ்: இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று பார்பிடாஸ் நகரிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங்- கைல் மேயர்ஸ் ஜோடியில் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரிலேயே மேயர்ஸ் 2(9) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அலிக் அதானாஸ் 22(18) ரன்களிலும், பிராண்டன் கிங் 17(23) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 45 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷாய் ஹோப் -ஷிம்ரான் ஹெட்மையர் ஜோடி சிறிது நேரம் விக்கெட் கொடுக்காமல் விளையாடியது. இந்நிலையில் ஜடேஜா பந்தில் தேவையில்லாத ஷாட் ஆடிய ஹெட்மையர் 11(19) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரோவ்மன் பவல் 4(4) ரன்னிலும், ரொமாரியோ ஷெப்ஃபர்ட் ரன்கள் ஏதுமின்றியும் ஜடேஜாவிடமே விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய டொமினிக் டிரேக்ஸ் 3(5), யானிக் கரியா 3(9) ஆகியோர் குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஷாய் ஹோப் 43(45) ரன்களுடன் குல்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற, தொடர்ந்துவந்த ஜெய்டன் சீல்ஸ் ரன்கள் ஏதுமின்றி குல்தீப் யாதவிடமே ஆட்டமிழந்தார்.
இதனால் 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 114 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், ஷர்தூல் தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன்- ஷுப்மன் கில் ஜோடியில் 7 (16) ரன்கள் எடுத்திருந்த கில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த சூர்யகுமார் யாதவ் 19(25) ரன்களுடன் குடகேஷ் மோதை பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையிலும், ஹர்திக் பாண்டியா 5(7) ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாகியும் ஏமாற்றமளித்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த இஷான் கிஷன் 52(46) ரன்கள் எடுத்திருந்தபோது குடகேஷ் மோதை பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ஷர்துல் தாக்கூர் 1(4) ரன் மட்டுமே எடுத்து யானிக் கரியா பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால் இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா-கேப்டன் ரோஹித் சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 22.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Be the first to comment on "இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது."