போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினிலுள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 438 ரன்கள் எடுத்து ஆல அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களுக்கு 229/5 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் அலிக் அதானேஷ் 37 ரன்களுடனும், ஜேஸன் ஹோல்டர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆனால் அலிக் அதானேஷ் 37(115) சிறிது நேரத்திலேயே முகேஷ் குமார் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஜேஸன் ஹோல்டர் 15(44) ,அல்ஜாரி ஜோசப் 4(12), கீமார் ரோச் 4(13), ஷெனான் கேப்ரியல் 0(1) ஆகியோர் சொற்ப ரன்களுடன் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 115.4 ஓவர்களிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்- கேப்டன் ரோஹித் ஷர்மா ஜோடியில் அரைசதம் கடந்து அசத்திய ரோஹித் ஷர்மா 57(34) ரன்களுடன் ஷெனான் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 38(30) ரன்களுடன் கீமார் ரோச் பந்துவீச்சில் வெளியேறினார்.
மழை குறுக்கிட்டப்பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது களமிறங்கிய ஷுப்மன் கில்- இஷான் கிஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் அரைசதம் கடந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 52(34) ரன்களுடனும், ஷுப்மன் கில் 29(37) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான கிரேக் பிராத்வைட்-டெக்நரைன் சந்தர்பால் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் 28(52) ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பிராத்வைட் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கிர்க் மெக்கன்ஸி ரன்கள் ஏதுமின்றி அஸ்வின் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் வெளியேறினார்.
ஆனால் அதன்பின்னர் டெக்நரைன் சந்தர்பாலுடன் ஜோடி சேர்ந்த ஜெர்மைன் பிளாக்வுட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் சந்தர்பால் 24(98), பிளாக்வுட் 20(39) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலிருகக், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 32 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 76 ரன்களைச் சேர்த்தது.
Be the first to comment on "நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 76/2 ரன்கள் எடுத்துள்ளது."